வளைகுடா நாடுகளில் பதற்றம்: இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை

வளைகுடா நாடுகளில் பதற்றம்: இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை

2 mins read
8410c044-1b6a-43a8-b7c9-1110350894cd
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக 24 மணி நேர உதவி எண்களுடன் உடனுக்குடன் பயண ஆலோசனைகளையும் மத்திய அரசு வழங்கி ஆதரவளித்து வருகிறது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: வளைகுடாப் பகுதிகளிலும் மேற்கு ஆசிய வட்டாரங்களிலும் நிலவி வரும் அசாதாரண சூழலை மத்திய வெளியுறவு அமைச்சு மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக 24 மணி நேர உதவி எண்களுடன் உடனுக்குடன் பயண ஆலோசனைகளையும் வழங்கி மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது.

இது குறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண்களைத் தொடங்கி, இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன.

“உள்ளூர் அரசாங்கங்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமைகளைக் கவனித்து வருகின்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்க அரசு அடிக்கடி பயண ஆலோசனைகளையும் வெளியிட்டு வருகிறது.

விமானப் போக்குவரத்து நிலை, உள்ளூர் அரசின் வழிகாட்டி முறைகள், தூதரகச் சேவைகள் குறித்த தகவல்கள் இந்தியச் சங்கங்கள், தொழில்துறை அமைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

குறிப்பாக, இவ்வட்டாரத்தில் உள்ள கப்பல்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் நலனுக்கு அரசு பேரளவில் முன்னுரிமை அளிக்கிறது.

இந்தியா திரும்புவது குறித்தான அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கவும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இதுவரை ஏறத்தாழ 12,96,000 பயணிகள் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு சிற்றரசில் இருந்து பாதுகாப்பு கருதி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 110 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சவூதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து விமானச் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் நிலையில், கத்தார், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியைத் திறந்துள்ளதால் அங்கிருந்தும் குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஈரானில் உள்ள இந்தியர்கள் சாலைமார்க்கமாக வெளியேறவும் இந்தியத் தூதரகம் உதவி வருகிறது.

இதுவரை டெஹ்ரானில் உள்ள தூதரகம் மூலமாக 2,445 இந்தியர்கள் நில எல்லைகள் வழியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், இஸ்ரேலில் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால், அங்கிருக்கும் இந்தியர்கள் இந்தியா திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வரும் வெளியுறவு அமைச்சு, தேவைக்கேற்ப கூடுதல் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்