புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சமய, பாரம்பரியத் தலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் உள்ள செங்கோட்டை, சாந்தினி சௌக் உள்ளிட்ட பகுதிகளையும் முக்கியமான சில கோவில்களையும் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா, இத்தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியதை அடுத்து, டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
நவீன, மேம்படுத்தப்பட்ட குண்டுவெடிப்புக் கருவியின் (IED) மூலம் இத்தகைய தாக்குதல் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில் மீது நடத்தப்படக்கூடும் என்று வெளியான தகவலால் அங்கும், செங்கோட்டை பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு பழிவாங்கும் விதமாக, டெல்லி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என உளவுத்துறை கணித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.
அத்தாக்குதல் நடந்த விதத்தைச் சுட்டிக்காட்டி உள்ள காவல்துறையினர், மீண்டும் அதேபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து டெல்லியில் காவல்துறை பாதுகாப்பும் கண்காணிப்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
நகரம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை உளவுத்துறையினர் உடனுக்குடன் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாகனத் தணிக்கை தீவிரமடைந்துள்ளதுடன், மாநகரில் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள், மோப்பநாய்ப் பிரிவு, விரைவுப் படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பயங்கரவாத சதித்திட்டப் பின்னணியில் பல்வேறு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து எட்டு பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
எட்டு பேரும் பொது இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளைப் பொது இடங்களில் ஒட்டியது, பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பங்ளாதேஷ் பயங்கரவாத அமைப்புகளுடன் இந்த எட்டு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் ஊத்துக்குளி பகுதியில் இரண்டு பேரும் பல்லடம் பகுதியில் மூவரும் திருமுருகன்பூண்டி பகுதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள்போல் பணியாற்றி வந்துள்ளனர்.
எட்டு பேரில் நால்வர் மட்டும் அண்மையில் டெல்லி சென்று சுதந்திர காஷ்மீர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒட்டியுள்ளனர்.
மற்ற நால்வரும் மேற்கு வங்கம் சென்றுள்ளனர். இவர்கள் மிகப்பெரிய சதித்திட்டத்தைச் செயல்படுத்த தயாரான வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

