புதுடெல்லி: புதுடெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களுக்குப் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து, அவ்விரு மாநிலங்களிலும் பாதூகாப்பு, கண்காணிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆன்மிகத் தலங்கள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் இடையே பகிரப்பட்ட மின்னஞ்சல் ஒன்று சிக்கியதையடுத்து பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தெரியவந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள குருத்வாரா ஒன்றில் அண்மையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக்கோரி ஒரு பிரிவினர் மூன்று நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலின் பின்னணியில் தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
உளவுத்துறையிடம் சிக்கிய மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்து டெல்லி காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
தாக்குதல் நடக்கவுள்ள பகுதி, நேரம் குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களின் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

