பானாஜி: தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் பேங்காக் நகரில் இருந்து நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுக்கு விமானம் மூலம் கஞ்சா கடத்தியுள்ளனர்.
இதற்காக சாக்லெட் உறைகளுக்குள் ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டதாகவும் அதன் அனைத்துலகச் சந்தை மதிப்பானது, வழக்கமாக புழக்கத்தில் உள்ள கஞ்சாவைவிட பத்து மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
காத்மாண்டுவில் இருந்து கோவாவுக்கு பேருந்து, வாடகை கார்கள் மூலம் கஞ்சா கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடந்த 8ஆம் தேதியன்று,
பெங்களூருவைச் சேர்ந்த கௌதம் (26) என்பவர், பாலிதீன் உறைகளில் பழங்களுடன் மறைத்து கடத்திவரப்பட்ட கஞ்சாவுடன் கோவா விமான நிலையத்தில் பிடிபட்டார்.
விசாரணையின் முடிவில், கோவாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள, 11.67 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளியான ஷில்னா என்பவரும் தற்போது கைதாகி உள்ளார். இவர் பேங்காக், பெங்களூருவில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கியமான உறுப்பினர் என கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்தடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக, இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஸ்ரீஜில் பிபி என்பவர் கடந்த 19ஆம் தேதியன்று, கேரளாவின் கண்ணூரில் கைதானார்.
தொடர்புடைய செய்திகள்
பேங்காக்கில் இருந்து நேப்பாளத்துக்கு கஞ்சா கடத்தியவர்களுக்கு இவர்தான் விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தார் என்றும் கோவாவில் இருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டது உறுதியாகி உள்ளது என்றும் கோவா குற்றப்பிரிவு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாய்லாந்தில் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் இந்தக் கடத்தல் கும்பலின் மற்ற உறுப்பினர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

