பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தனியார் விலங்கியல் தோட்டம் ஒன்றில் சுற்றுப்பயணியருடன் பழகப் பயிற்சியளிக்கப்பட்ட புலி திடீரென சுற்றுப்பயணி ஒருவரைத் தாக்கியது.
அந்தப் புலியுடன் அவர் தம்படம் எடுக்க முயற்சித்ததாகக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்று மே 29ஆம் தேதி வெளியானது. இதுவரை 3.7 மில்லியனுக்கும் அதிகமானோர் அக்காணொளியைக் கண்டுள்ளனர்.
“தாய்லாந்தில் புலியால் தாக்கப்பட்ட அந்த நபர் இந்திய நாட்டவர் என நான் எண்ணுகிறேன். புலிகளைச் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் விலங்கியல் தோட்டங்களில் இதுவும் ஒன்று. அங்குப் புலிகளைத் தொட்டு பார்க்கலாம். தன்படம் எடுத்துக்கொள்ளலாம். மனிதர்களுடன் பழகக் குட்டிகளிலேயே அவற்றிற்குப் பயிற்சிகள் அளிக்கப்படும்,” என அக்காணொளியைப் பதிவிட்ட திரு சித்தார்த் கூறினார்.
புக்கிட் டைகர் கிங்டம் விலங்கியல் தோட்டத்தில் அச்சம்பவம் எப்போது நடந்தது போன்ற விவரங்கள் அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
சுற்றுப்பயணி ஒருவர் அந்தப் புலியுடன் நடைபயிற்சி செல்வதையும் புலியின் அருகே அந்த நபர் அமருவதையும் பயிற்சாளர் புலியை அந்தச் சுற்றுப்பயணிக்கு அருகே அமரச் சொல்வதையும் அந்தக் காணொளியில் காணமுடிந்தது.
திடீரென, அந்த நபரைப் புலி தாக்கியதால் அவர் அலறுவதையும் அதில் பார்க்கலாம்.