தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து: இந்தியர்களுக்குக் காலவரையறையற்ற விசா சலுகை

1 mins read
d8145faa-3d0f-4397-80b8-feed506ba6a6
தாய்லாந்துக்கு இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏறத்தாழ 1.64 மில்லியன் இந்தியச் சுற்றுப்பயணிகள் சென்றிருந்தனர். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: தாய்லாந்து அரசாங்கம், இந்தியச் சுற்றுப்பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்கும் நடைமுறையை காலவரையறையின்றி நீட்டித்துள்ளது.

தாய்லாந்தின் சுற்றுப்பயண ஆணையம் இத்தகவலை உறுதிப்படுத்தியது.

இந்தியச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்க இயலும். விரும்பினால் உள்ளூர்க் குடிநுழைவு அலுவலகத்தின் அனுமதியுடன் மேலும் 30 நாள்களுக்கு அவர்கள் தங்கவும் வாய்ப்புண்டு.

இந்தியப் பயணிகள் விசாவிற்கு விண்ணப்பிக்காமலே தாய்லாந்து செல்லும் சலுகையை இத்திட்டம் வழங்குகிறது.

கடந்த ஆண்டு (2023) நவம்பர் 10ஆம் தேதி இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மே 10ஆம் தேதியுடன் அது முடிவடையும் என்று முன்னர் கூறப்பட்டது. பின்னர், தாய்லாந்து அரசாங்கம் நவம்பர் 11ஆம் தேதி வரை அதை நீட்டித்தது. தற்போது காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சுற்றுப்பயணிகளின் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகளில் தாய்லாந்தும் அடங்கும்.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1.64 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்திற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.

தாய்லாந்திற்கு அதிகம் செல்லும் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் பட்டியலில் மலேசியா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்