மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், தானேவின் டோம்பிவிலி நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிப்பிலும் அதனால் பரவிய தீயிலும் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
‘அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற அத்தொழிலகத்தில் வியாழக்கிழமை (மே 23) பிற்பகல் வெடிப்பு ஏற்பட்டது.
அதனால், டோம்பிவிலியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு வேதிப்பொருள் நாற்றம் அடித்தது. அத்துடன், சாலைகள், கடைகள், வீடுகள்மீது சாம்பல் படிந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் பலரும் முகக்கவசம் அணிந்தபடி நடமாடுகின்றனர்.
தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் தீயணைப்புப் படையினரும் வெள்ளிக்கிழமையும் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர். அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் மூன்று உடல்களை அவர்கள் மீட்டனர்.
இவ்விபத்தில் காயமுற்ற 64 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவே தீ அணைக்கப்பட்டு, குளிர்விக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இப்பேரிடரின் தாக்கம் கிட்டத்தட்ட 2-3 கிலோமீட்டர் தொலைவிற்கு உணரப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை மாலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர்களைத் தவிர்க்கும் வகையில், அத்தகைய அபாயகரமான தொழிற்சாலைகள் வேறிடத்திற்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக அவர் சொன்னார்.
விபத்து நிகழ்ந்த ஆலையின் உரிமையாளர்கள் மலய் மேத்தா - மாலதி மேத்தா இணையர்மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளது.