புதுடெல்லி: வங்கிகளும் சேவை வழங்குநர்களும் 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்க மாட்டா என்று இந்தியாவின் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்மூலம் மொத்த யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஏறக்குறைய 96 விழுக்காடு கட்டணமில்லா வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அரசிதழில் வெளியிடப்பட்டது.
நிதி அமைச்சின்கீழ் இயங்கும் நிதிச் சேவைகள் துறை, ‘ரூபே டெபிட் கார்டு’, ரூ. 2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள் என்னும் இரண்டு மின்னணுக் கட்டண முறைகளை அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
“இந்த இரு மின்னணு முறைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவோர் அல்லது பெற்றுக்கொள்வோர்மீது எந்தவொரு வங்கியும் சேவை வழங்குநரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தக் கட்டணத்தையும் விதிக்கக்கூடாது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும் எனத் தகவல்கள் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் குழப்பங்களைத் தீர்க்கும் வகையிலும் நிதியமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, யுபிஐ முறையில் ஜிபே, ஃபோன் பே, அமேசான் பே, பேடிஎம், பிம் யுபிஐ போன்ற செயலிகள் வாயிலாக பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
