மும்பை: இந்தியாவும் பிரான்சும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, “சிறப்பு உலகளாவிய கூட்டு ஒத்துழைப்பு” என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
டெல்லியில் நடைபெறும் அனைத்துலக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்ச மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள மெக்ரோனை, மும்பை ஆளுநர் மாளிகையில் மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரு தலைவர்களும் மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026’ வா்த்தக மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றினர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மிகச் சிறப்பானது என்றும் பழைமை வாய்ந்தது என்றும் திரு மோடி கூறினார்.
இருதரப்புக்கு இடையேயான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை சிறப்புமிக்க, உலகளாவிய உத்திபூர்வ பங்காளித்துவத் தகுதிக்கு உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார்.
புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை தாங்குவதாக திரு மெக்ரோன் பாராட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய இளம் தலைமுறையினரின் திறமையும், புதுத்தொழில் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சியும் தம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்னிலக்க மயமாக்கல், நவீன தொழில்நுட்பங்களை இந்தியா கையாளும் விதம் உலகிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றார்.
பாதுகாப்பு, வணிகம், சுகாதாரம், விண்வெளி, அணுசக்தி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அவற்றுள் இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் ஒன்று. பிரான்சின் ‘ஹேமர்’ ஏவுகணைகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
பிரான்ஸிற்கு வெளியே ரஃபேல் தயாரிக்கப்படும் முதல் நாடாக இந்தியா உருவெடுப்பது, அங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதோடு அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்தும். மேலும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், மிகப்பெரிய தாக்குதல் கப்பல்களை உருவாக்குவதிலும் பிரான்சின் தொழில்நுட்ப உதவி இந்தியாவுக்குக் கிடைக்கிறது.
மேலும், விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
பிரான்சில் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு ஐந்தாண்டு கால ‘ஷெங்கன் விசா’ வழங்குவதை பிரான்ஸ் உறுதி செய்துள்ளது.
2026ஆம் ஆண்டு ‘இந்திய பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

