புதுடெல்லி: டெல்லியில் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெருநாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் தெருநாய் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்துள்ளது.
எட்டு வாரங்களுக்குள் நாய் காப்பகங்களை அமைக்கவும், கைப்பற்றப்பட்ட தெருநாய்கள் குறித்து அன்றாடம் பதிவேற்றவும் நீதிமன்றம் நகர அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.
“பதிவு இல்லாமல் இந்தத் திட்டத்தால் பயனில்லை. ஒரு நாய்கூட வெளியே விடப்படக் கூடாது,” என்று அது கூறியது. கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் பொருந்தும்.
நாய்களை அகற்றுவதற்குத் தடையாக இருக்கும் விலங்கு ஆர்வலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
நாய் கடி குறித்த புகார் தெரிவிக்க 24 மணி நேர உதவி மையம் அமைக்கவும் ரேபிஸ் தடுப்பு மருந்துகளுள்ள இடங்களை விளம்பரப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் போதுமான பணியாளர்கள் காப்பகங்களில் இருக்க வேண்டும், அவை பொது இடங்களில் விடப்படக்கூடாது. நாய்கள் வெளியே செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய உள்சுற்றுக் கண்காணிப்பு கேமராக்கள் அந்த நிலையங்களைக் கண்காணிக்க வேண்டும். அடுத்த ஆறு வாரங்களில் 5,000 முதல் 6,000 நாய்களுக்கான காப்பகத்திற்கான பணியைத் தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா மில்லியன் கணக்கான தெருநாய்களின் தாயகமாக உள்ளது. அன்றாடம் பலர் குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைய தரவுகளின்படி, டெல்லித் தெருக்களில் குறைந்தது 60,000 தெருநாய்கள் வாழ்கின்றன என்று இந்தியா கால்நடை கணக்கெடுப்பு 2012ன் அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, உலகளாவிய வெறிநாய்க்கடி இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. கருத்தடைத் திட்டங்கள் குறைவாக இருப்பதும் ஆபத்தான நாய்களைக் கொல்வதற்கான சட்டக் கட்டுப்பாடுகளும் தெருநாய்ப் பெருக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.