கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனருக்கு அச்சுறுத்தல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனருக்கு அச்சுறுத்தல்

1 mins read
e86bb9fd-d87b-42cc-a97f-a08b16c467a6
இந்திய மாணவர் அபிஜித் தீப்கே (இடது), கடந்த 16ஆம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சமூக ஊடகத்தில் தொடங்கினார்.  - படம்: எக்ஸ்/அபிஜித் தீப்கே

புதுடெல்லி: தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

“வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போலச் சமூக ஊடகங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்,’’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16ஆம் தேதி காக்ரோச் ஜனதா கட்சியை (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) சமூக ஊடகத்தில் தொடங்கினார்.

இந்தக் கட்சியில் மில்லியன் கணக்கானோர் இணைந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் அபிஜித் தீப்கே தமக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“இணையத்தில் புதிய கட்சியைத் தொடங்கிய பிறகு சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்,” என்று அபிஜித் தீப்கே குறிப்பிட்டார்.

அபிஜித் தீப்கேவின் பெற்றோர் பகவான், அனிதா மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசிக்கின்றனர். அவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

“எனது மகன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைத் தொடங்கிய நாள் முதல் எங்களது தூக்கத்தைத் தொலைத்துவிட்டோம். இதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எங்கள் மகன் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று அஞ்சுகிறோம்,” என்று அபிஜித் தீப்கேவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்