புதுடெல்லி: பங்ளாதேஷில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் 4,000 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்ளாதேஷில் இந்தியர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், “வங்கதேசத்தில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.
பங்ளாதேஷில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே, அங்கு பயின்று வரும் இந்திய மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி, ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கத்தின் (JKSA) தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குஹாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பங்ளாதேஷில் பயிலும் இந்திய மாணவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அடையாளத்தை மறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஒரு மாணவருக்கு மிகவும் வேதனையான விஷயம்,” என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தாங்கள் வசிக்கும் விடுதிகளை விட்டு வெளியே வர முடியாமல் அங்கேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு அவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக திரு நசீர் தெரிவித்துள்ளார்.
மேலும், பங்ளாதேஷில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை இந்திய வெளியுறவு அமைச்சும் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நிலைமை மேலும் மோசமடைந்தால், மாணவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர சிறப்பு மீட்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நிலையில், வட இந்தியாவில் பங்ளாதேஷுக்கு எதிராக அங்கு செயல்பட்டு வரும் இந்து அமைப்புகள் போராட்டங்களை முடுக்கிவிட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டெல்லி, மும்பை, கொல்கத்தா கவுஹாத்தி, அகர்தலா, சிலிகுரி ஆகிய நகரங்களில் உள்ள பங்ளாதேஷ் தூதரகங்களின் முன்பு இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 18ஆம் தேதி மைமன் சிங் மாவட்டம், பலுக்கா பகுதியைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் (30) அடித்துக் கொல்லப்பட்டார்.
தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்கக் கோரியும் புதுடெல்லியில் உள்ள பங்ளாதேஷ் தூதரகம் முன்பாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டு முழக்கங்களை எழுப்பி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவத்தால், பங்ளாதேஷ் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாகவும், அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் பங்ளாதேஷ் இடைக்கால அரசு, இந்தியா மீது குற்றஞ்சாட்டியது. ஆனால், இக்குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

