அமராவதி: ஆந்திராவில் கொள்கலன் லாரி மீது பேருந்து மோதியதால் ஏற்பட்ட தீயில் சிக்கி மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
புதன்கிழமை (ஜனவரி 21) நள்ளிரவு நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த தனியார் பேருந்தில் 36 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
நந்தியால் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பேருந்தின் ‘டயர்’ திடீரென வெடித்தது. இதனால் தன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை நிறுத்த ஓட்டுநர் போராடினார்.
எனினும், சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தனியார் பேருந்து எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பயங்கரமாக மோதியதில் பேருந்து தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் பீதியில் கூக்குரலெழுப்பினர்.
மேலும் பேருந்தின் இரு கதவுகளையும் அவசர வழிக் கதவுகளையும் திறக்க முடியாமல் போனதால் பீதி அதிகரித்து பயணிகள் சிலர் பேருந்தின் சன்னல் கண்ணாடிகளை உடைக்க முயன்றனர்.
அதற்குள் கொள்கலன் லாரியில் ஏற்பட்ட தீ பேருந்துக்கும் பரவியது. இதில் லாரி, பேருந்து ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். லாரி உதவியாளரும் மாண்டார். கண்ணெதிரே மூன்று உயிர்கள் பறிபோயின.
அச்சத்தில் பயணிகள் உறைந்துபோக, நல்லவேளையாக விபத்து நடந்த சாலை வழியாக சென்ற மற்றொரு சிறிய ரக லாரி ஓட்டுநர் விபத்து நடந்திருப்பதைப் புரிந்துகொண்டு வேகமாகச் செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் பேருந்தின் சன்னல் கண்ணாடிகளை உடைக்க, அதைப் பயன்படுத்தி பயணிகள் வேகமாக வெளியேறி உயிர் தப்பியதாக நந்தியால் மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியிருக்கக்கூடும் என்றும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

