என்விடியா தலைமை நிர்வாகி போட்டியில் மூன்று இந்திய வம்சாவளியினர்

என்விடியா தலைமை நிர்வாகி போட்டியில் மூன்று இந்திய வம்சாவளியினர்

படங்கள்: இந்துஸ்தான் டைம்ஸ், ஏஎஃப்பி

13 Nov 2026 - 6:56 pm

2 mins read

வா‌ஷிங்டன்: என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான ஜென்சன் ஹுவாங் வியாழக்கிழமை (நவம்பர் 12) பதவி விலகினார். அவர்மீது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் குறித்த பல புகார்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தை வழிநடத்திய அவருக்குப் பதிலாக, தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

என்விடியா நிறுவன நிரந்தரத் தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

அப்பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா, தாமஸ் குரியன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

‘மைக்ரான் டெக்னாலஜி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மெஹ்ரோத்ராவின் தலைமையில் அந்நிறுவனப் பங்குகள் 2,700 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்தன. செயற்கை நுண்ணறிவு நினைவகச் சில்லுகளின் தேவை அதிகரித்ததே அதற்குக் காரணமாகும்.

2018ஆம் ஆண்டு முதல் ‘பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்’ நிறுவனத்தை வழிநடத்தும் அரோரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணையப் பாதுகாப்பில் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். இதற்கு முன் அவர் சாஃப்ட் பேங்க் தலைவராகவும் கூகல் நிறுவனத்திலும் பணியாற்றினார்.

கூகல் கிளவுட் தலைவர் குரியன், உலகளாவிய கிளவுட், பெருநிறுவன மென்பொருள், செயற்கை நுண்ணறிவுச் சேவைகளை நிர்வகித்துவருகிறார்.

நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தகுதியானவர்களைத் தேட வெளிநிறுவனம் ஒன்றை என்விடியா நியமித்துள்ளதாகப் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. சில்லுத் தயாரிப்பு நிறுவனத்தை உலகின் மதிப்புமிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றிய ஹுவாங்கின் இடத்தை நிரப்புவது சவாலான பணியாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்