மும்மொழிக் கொள்கை: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

மும்மொழிக் கொள்கை: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

2 mins read
‘6ஆம் வகுப்பிலிருந்து இனி மும்மொழிக் கொள்கை’ - சிபிஎஸ்இ அறிவிப்பு
55c4fc0f-f9d2-4bb9-a02c-2ddecf20bbd9
மும்மொழிக் கொள்கை மாணவர்களின் சுமையை அதிகரிக்கும் என்று தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின் சாடியுள்ளார். - படம்: இந்தியா.காம்
multi-img1 of 2

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மும்மொழிக் கொள்கை என்பது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சி என்று சாடியுள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு அண்மை அறிமுகம் செய்யப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம், மொழித் திணிப்பை நோக்கியது என்று எக்ஸ் தளத்தில் திரு ஸ்டாலின் பதிவிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், இந்திய மொழிகளை ஊக்குவிப்பதாகக் கூறி செழுமையும் பன்முகத்தன்மையும் நிறைந்த மொழிகளைத் திட்டமிட்டு ஒதுக்குவதாகவும் இந்திக்கு முன்னுரிமை அளிப்பதை மையப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரை அண்மைய சிபிஎஸ்சி பாடத்திடம், கட்டாய இந்தித் திணிப்பை வலியுறுத்துகிறது என்ற திரு ஸ்டாலின், இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகள் கட்டாயமாக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

எனவே, சிபிஎஸ்சி பாடத்திட்டம் ஒருதலைபட்சத்தையும் பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.

“இந்த முரண் வெளிப்படையானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாமல் போதிய தமிழாசிரியர்களைத் தொடர்ந்து நியமிக்கத் தவறிய ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்,” என்று திரு ஸ்டாலின் சாடினார்.

ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் போதிய பயிற்சிக்கான திறன், உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் குறித்த உண்மையான களநிலவரத்தை ஒன்றிய அரசாங்கம் உணர்ந்திருக்கிறதா என்றும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் திரு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சிபிஎஸ்சி பாடத்திட்டம் எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே தோன்றுவதாகவும் திரு ஸ்டாலின் கூறினார்.

“இந்தி பேசும் மாணவர்களுக்குக் கட்டமைப்பு ரீதியான சலுகைகளை அளித்து உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே புதிய பாடத்திட்டம் உண்டாக்கும்,” என்று திரு ஸ்டாலின் சுட்டினார்.

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில் எதிர்காலத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமையை அவர்கள்மீது சுமத்துவது அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் செயல் என்று திரு ஸ்டாலின் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்