புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல், மும்மொழிக் கொள்கை முறை கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டில் புதுச்சேரியின் அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தேசியக் கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
புதிய விதிமுறையின்படி, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்பது அவசியமாகிறது.
இந்த மும்மொழிக் கொள்கையில் பயிற்றுவிக்கப்படும் மூன்று மொழிகளில், இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்கவேண்டும்.
ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழி என்பதால், எஞ்சிய இரண்டு மொழிகளும் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
தற்போது புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்-ஆங்கிலம், மாஹேவில் மலையாளம்-ஆங்கிலம், ஏனாமில் தெலுங்கு-ஆங்கிலம் என இருமொழி முறை நடைமுறையில் உள்ளது.
இனி கூடுதலாக ஓர் இந்திய மொழியை ஏற்க வேண்டும் என்பதால், இந்தியைப் பயிற்றுவிக்க வேண்டிய சூழலுக்குப் புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பிரெஞ்சு போன்ற பிற மொழிகளைப் பயிலும் மாணவர்களின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில், மும்மொழிக் கொள்கையை இன்னும் அமல்படுத்தாத பள்ளிகள் உடனடியாக அதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், வரும் கல்வியாண்டுகளில் 5ஆம் வகுப்பிலிருந்து இரண்டாம் மொழியாகத் தமிழ் அல்லது இந்தியை மட்டுமே வழங்க முடியும் என்று பள்ளி முதல்வர்கள் தரப்பில் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
மே 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்கும் அரசுக்கு இந்த மும்மொழிக் கொள்கையும் இந்தி திணிக்கப்படுகிறது என்ற புகார்களும் மிகப் பெரிய அரசியல் சவாலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

