திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் திருடப்பட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கோவிலில் திருடப்பட்டது போக, மீதமிருந்த நகைகளையும் திருடத் திட்டமிடப்பட்டிருந்ததாக இக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்து 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டது தொடர்பாக 15 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
மேலும் கோவில் கதவு, நிலை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கத்தை திருடியது தொடர்பாக 15 பேர் சிக்கியுள்ளனர்.
இரு வழக்குகளிலும் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உன்னி கிருஷ்ணன் என்பவர் இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தங்கத்திருட்டில் உன்னி கிருஷ்ணன், கர்நாடகாவைச் சேர்ந்த நகை வியாபாரி கோவர்தன், சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகிய மூவருக்கும் தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூவரும் சேர்ந்து நகைகளைத் திருட சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வழக்குகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது குறித்து மூவரும் பெங்களூரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் முக்கியமான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் புலனாய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் மீதமுள்ள தங்கத்தையும் திருடத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளதையடுத்து ஐயப்ப பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சபரிமலை கோவிலில் நெய் விற்பனை செய்ததில் ரு.16 லட்சம் மோசடி நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது.
சபரிமலை கோவில் நிர்வாகம் ஐயப்ப சாமி உருவம் பதித்த தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இதேபோன்ற நாணயங்களைக் கோவிலில் இருந்து திருடப்பட்ட தங்கத்தைக் கொண்டு தயாரித்து சன்னிதானத்திலேயே விற்பனை செய்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

