புதுடெல்லி: ரயில் அல்லது ரயில் நிலைய வளாகங்களில் பட்டாசு, வெடிமருந்துகள், எரிவாயு உருளைகள், பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயகரமான பொருள்களைக் கொண்டுசெல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை மீறி பட்டாசு அல்லது வெடிபொருள்களை எடுத்துச் செல்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டப்பிரிவின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
மேலும், இதனால் ஏதேனும் அசம்பாவிதம், விபத்து ஏற்பட்டால், ஏற்படும் சேதங்களுக்கும் அவரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரேனும் சட்டவிரோதமாக வெடிபொருள்களைக் கடத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க, முக்கியமான ரயில் நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
