கேரளத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை

கேரளத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை

கோப்புப் படம்: தினமணி

24 Nov 2026 - 6:13 pm

2 mins read

திருவனந்தபுரம்: பெற்றோரின் சொத்துகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டு, வயதான காலத்தில் அவர்களைக் கைவிடும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இந்தியாவின் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில், லுலு குழுமத் தலைவர் எம்.ஏ. யூசுப் அலியின் நிதியுதவியுடன் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் முதியோர்களுக்கான நவீன இல்லம் கட்டப்பட்டுள்ளது.

அதைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் வி.டி.சதீசன், புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்கினார்.

“தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காகப் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் பெரிய நிலைக்கு வந்த பிறகு பெற்றோரைப் புறக்கணிப்பது வேதனையளிக்கிறது. அத்தகைய பண்பாடு கேரளத்தில் இனி ஒருபோதும் இருக்கக் கூடாது,” என்றார் திரு சதீசன்.

தமது அரசு பதவியேற்றவுடன் நாட்டிலேயே முதல்முறையாக முதியவர்களுக்கென தனித் துறையை உருவாக்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், முதியோரின் உரிமைகளைப் பாதுகாக்க உலகிலேயே முன்மாதிரியான சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“பெற்றோரின் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை நடுத்தெருவில் விடும் பிள்ளைகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கும் பிரிவை நானே திட்டமிட்டு இந்தச் சட்டத்தில் சேர்த்துள்ளேன். ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தச் சட்டம் உடனடியாக நடப்பிற்கு வரும். அதன்பிறகு பெற்றோரைக் கைவிடுபவர்கள் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள்,” என முதல்வர் சதீசன் கூறினார்.

கேரளத்தில் எந்தவொரு முதியவரும் தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதே தமது லட்சியம் என்றும் பெற்றோரை அன்புடன் அருகில் வைத்துப் பராமரிக்கும் நல்ல சமூக மாற்றம் உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்