அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஒண்டிமிட்டா கோதண்ட ராமர் கோவில். அங்குள்ள கோவில் குளத்தின் நடுவே 600 அடி உயர ராமர் சிலை ஒன்றை அமைப்பதற்கு முடிவாகி உள்ளது.
இதன் மூலம் ஒண்டிமிட்டா நகரை தேசிய அளவிலான ஆன்மிக, சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ராமர் சிலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிலின் தெப்பக்குளத்தைச் சீரமைத்தல், பசுமையான பகுதிகளை உருவாக்குதல், வழிபாட்டு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தப் பிரம்மாண்ட சிலை கோவிலுக்கு வரும் பார்வையாளர்களை ஈர்க்கும் காந்தமாகச் செயல்படும் என்றும் இச்சிலை நிறுவப்பட்ட பின்னர், உலகின் ஆக உயரமான ராமர் சிலைகளில் ஒன்றாக இது விளங்கும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
“சிலை அமைப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு சிறந்த தலமாக ஒண்டிமிட்டா நகரத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.
“விஜயவாடா திட்டமிடல், கட்டடக் கலை பள்ளியால் தயாரிக்கப்பட்ட இந்த முழுமையான திட்ட அறிக்கை அண்மையில் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
“இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், அடுத்த முப்பது ஆண்டுகளில் பக்தர்களின் வருகை கணிசமாக உயரக்கூடும்,” என்று அதிகாரிகள் கூறியதாக ஏசியாநெட் தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.