புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மாதந்தோறும் வரையறுக்கப்பட்ட அளவில் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காவிரியில் இருந்து பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் 37வது கூட்டம் காணொளிச் சந்திப்பு மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் பேசியபோது, “மேட்டூர் அணை பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுவதை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
ஆனால், இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆணையத்தின் தலைவர் ஹல்தர் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாதம்தோறும் வரையறுக்கப்பட்ட அளவிலான தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டார்.