தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கடினமான சூழ்நிலை’: இஸ்‌ரேலில் இந்தியர்கள் பரிதவிப்பு

2 mins read
37b67863-7e8e-49db-ab2f-1d832295f8da
இஸ்‌ரேலின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புமுறையின் மூலம் ஈரான் பாய்ச்சிய ஏவுகணைகள் சிலவற்றை முடக்க முடிந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இஸ்‌ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புநிலையில் இருப்பதுடன் இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறும் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் அக்டோபர் 2ஆம் தேதி சரமாரியாக ஏவுகணைகளைப் பாய்ச்சியதை அடுத்து இஸ்‌ரேலில் வாழும் இந்திய நாட்டவர், தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருவது பற்றிக் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஈரானிய ஏவுகணைகள் இஸ்‌ரேலால் தடுக்கப்படுவதைக் காட்டும் காணொளிகளையும் இந்தியர்கள் பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, டெல் அவிவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது நிலைமை நாளுக்கு நாள் ‘பயத்தைக் கூட்டுவதாக’ கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாசுக்கு எதிரான இஸ்‌ரேல் போரின்போது ஏற்பட்ட நெருக்குதலைக் காட்டிலும் தற்போதைய நெருக்குதல் கூடுதலாக இருப்பதாக அவர் சுட்டினார்.

இத்தகைய மிரட்டல் விடுக்கும் சூழலை இதுவரை தான் கண்டதில்லை என்று தெலுங்கானாவைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்தியர்கள் உட்பட இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் அருகிலுள்ள வெடிகுண்டு காப்பு புகலிடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேலிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இஸ்ரேலில் கூடுதல் சம்பளம் ஈட்டும் வாய்ப்பின் காரணமாக ஈர்க்கப்பட்டு, அங்கு சென்ற பிறகு பாதுகாப்பு உணர்வு விட்டுப் போனதாக சிலர் குமுறினர்.

இதற்கிடையே, இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் தேவையில்லா உள்நாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

“நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். இஸ்‌ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம்,” என்று தூதரகம் அதன் அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்