மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு விபத்து; 9 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு விபத்து; 9 பேர் உயிரிழப்பு

படம்: பிடிஐ

01 May 2026 - 6:47 pm

1 mins read

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் பார்கி அணையில் கவிழ்ந்த சுற்றுலாப் படகிலிருந்து பெண் ஒருவரின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அந்தப் பெண் தமது பிள்ளையை இறுக அணைத்தபடி இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பலரை மேலும் கவலையில் ஆழ்த்தியது.

மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை இயக்கிய அந்தச் சுற்றுலாப் படகு வியாழக்கிழமை (ஏப்ரல் 30) விபத்துக்குள்ளானபோது அதில் மொத்தம் 29 பயணிகள் இருந்தனர்.

கமாரியா தீவுப் பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது பலத்த சூறாவளி வீசியதால் நிலைதடுமாறிய படகு நீரில் மூழ்கியது.

அந்த விபத்தில் சிக்கியிருந்தோரில் 15 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். எஞ்சியோர் நீரில் மூழ்கி மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியாளர்கள் இதுவரை பெண்கள் இருவர் உட்பட எட்டுப் பேரின் உடல்களை மீட்டனர்.

இந்நிலையில், விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீரில் காணாமற்போன மேலும் 10 பேரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், அணையின் ஆழம், போதிய வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் மீட்புப் பணியாளர்கள் பெருஞ்சவாலை எதிர்கொண்டனர்.

மீட்கப்பட்டோர் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
காணாமல் போனவர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடிவருகின்றனர். - படம்: பிடிஐ
குறிப்புச் சொற்கள்
படகுவிபத்துசடலம்மீட்பு