கடல் உள்வாங்கியதால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகுச் சேவை நிறுத்தம்

கடல் உள்வாங்கியதால் கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகுச் சேவை நிறுத்தம்

1 mins read
41d7d027-d094-4c55-8ab7-9bcc8c00fe77
கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளுக்கான படகுச் சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். - படம்: தினத்தந்தி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திடீரென கடல் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, கடல் உள்வாங்கியதால் அங்கு சுற்றுலாப் படகுச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, புதிதாகத் திறக்கப்பட்ட கண்ணாடிக் கூண்டு பாலம் ஆகியவற்றுக்குச் செல்லக்கூடியது அந்தப் படகு.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சில மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த சுற்றுப் பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

அதனால், கடற்கரையிலிருந்தே அந்தப் பகுதிகளைப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

கன்னியாகுமரி கடற்பகுதியில் நிலவும் திடீர் இயற்கை மாற்றம் காரணமாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான படகுகளைப் படகுத்தளத்தில் இருந்து தடையின்றி இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடல் நீர்மட்டம் தாழ்வாக இருக்கும்போது படகுகளை இயக்கினால், அவை கடற்படுகையில் உள்ள பாறைகளிலோ அல்லது மணல் திட்டுகளிலோ மோதி சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, படகுச் சேவை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்