புனே: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள இந்திரயானி ஆற்றுக்கு மேலே இருந்த இரும்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இடிந்து விழுந்ததில் சுற்றுப்பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆறு பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் இடிந்து விழுந்த பாலத்திற்குக் கீழே சிலர் சிக்கிக்கொண்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புனேயில் மாவல் தாலுகாவில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்தபோது அதில் இருந்த 15 முதல் 20 சுற்றுப்பயணிகள் வரை, பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி எட்டுப் பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இரண்டு பெண்கள் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, வலுவான நீர் ஓட்டம் பாலம் இடிந்து விழுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. பதினைந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.
கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்தப் பாலத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.