புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் ஏற்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இரு நாடுகளின் குழுக்கள் உரிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் அவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
ஐநா வர்த்தக-மேம்பாட்டு மாநாட்டின் 16வது அமர்வில் பங்கேற்க ஜெனிவா சென்றிருந்த பியூஷ் கோயல், பின்னர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்திய வர்த்தகத் துறை செயலாளர் அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதாகவும் அமெரிக்காவில் தனது துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்ததாகவும் குறிப்பிட்ட திரு பியூஷ் கோயல், மிக விரைவில் நியாயமான, சம விகித ஒப்பந்தத்தை இரு நாடுகளும் செயல்படுத்த வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து அதிக அளவிலான எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்தியப் பொருள்களுக்கான அமெரிக்காவின் வரிகள் 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்திய நுகர்வோரின் நலன்களை முன்நிறுத்தியே எத்தகைய முடிவுகளையும் எடுக்க முடியும் என இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளும் என்றும் இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் மோடியுடன் பேசியிருப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார் அதிபர் டிரம்ப்.
இரு தலைவர்களும் ஆசியான் மாநாட்டின்போது சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியானது. எனினும் அம்மாட்டில் மெய்நிகர் முறையில் மட்டுமே பங்கேற்பர் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அடுத்த ‘குவாட்’ உச்ச நிலை மாநாட்டிற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படாததால், இருவரும் எப்போது சந்தித்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.
ஜெர்மனி பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துதல், பசுமை எரிசக்தி, புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தற்காப்பு ஆகியவை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றதாகவும் தொழில்நுட்ப பங்காளித்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் திரு பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதற்கான ஜெர்மனியின் உறுதிப்பாட்டையும் பேச்சுவார்த்தைகள் உள்ளடக்கியிருந்ததாக அவர் மேலும் கூறினார்.


