இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்: மின்னிலக்க வர்த்தகத்தில் முக்கிய உடன்பாடு

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்: மின்னிலக்க வர்த்தகத்தில் முக்கிய உடன்பாடு

2 mins read
0cb0f329-4189-4733-abb3-fdddc6d33cd3
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியா- ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இருதரப்பும் ஒருவருக்கொருவர் ‘மிகவும் விருப்பமான நாடு’ என்ற அந்தஸ்தை வழங்கிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் அமலான முதல் ஐந்து ஆண்டுகளில் மற்ற எந்த நாடுகளுக்கும் இதைவிடக் குறைவான வரிச் சலுகைகளை வழங்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இருதரப்புக்கும் இடையிலான வர்த்தக முன்னுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இருதரப்புக்கும் இடையிலான பொருளியல் உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்லவுள்ளது.

உலக அளவில் வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே நீண்டகாலமாகத் தாமதம் அடைந்த வர்த்தக ஒப்பந்தம் கடந்த மாதம் எட்டப்பட்டது.

பெரும்பாலான பொருள்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

முக்கிய அம்சங்கள்

வர்த்தகம் செய்யப்படும் பொருள்களின் மொத்த மதிப்பில் 96.6 விழுக்காடு பொருட்களுக்கு இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும்.

சட்டபூர்வமான ஒப்புதலுக்குப் பிறகு, அடுத்த ஓராண்டில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

இதன்மூலம் 2032ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்களுக்கு லாபம்

இந்த வரிக்குறைப்பின் மூலம் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சுமார் 4 பில்லியன் யூரோக்கள் வரிச் சேமிப்பு ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்திய வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சில முக்கிய வேளாண் பொருள்கள் சேர்க்கப்படவில்லை.

குறிப்பாக சோயா, மாட்டிறைச்சி, சர்க்கரை, அரிசி மற்றும் பால் பொருள்கள் போன்ற விவசாயம் சார்ந்த பொருள்கள் இந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் வராது என்று இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தெரிவித்துள்ளன.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு அப்பாற்பட்டு, புதிய இறக்குமதி அல்லது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இருதரப்பும் விதிக்கக் கூடாது என்பதில் உறுதி பூண்டுள்ளன.

மின்னிலக்க வர்த்தகத்தில் புதிய புரட்சி

காகிதமற்ற வர்த்தகம், இணையம் மூலம் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள், மின்னணு கையெழுத்துகள் ஆகியவற்றுக்கு அதிகாரபூர்வ சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.

இணையவழி வர்த்தகத்தில் தேவையற்ற தடைகளைக் குறைத்து, பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை உருவாக்க இரு தரப்பும் உறுதியளித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்