நாது லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகம் தொடங்கியது

நாது லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகம் தொடங்கியது

படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

02 Aug 2026 - 6:20 pm

2 mins read

கெளகாத்தி: இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாது லா கணவாய் (Nathu La) வழியாக எல்லை வர்த்தகம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மீண்டும் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகவும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் ராணுவப் பதற்றம் நிலவியது காரணமாகவும் நாது லா கணவாய் வர்த்தகப் பாதையில் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் முயற்சிகளின் பகுதியாக நாது லா கணவாய் வர்த்தகப் பாதையில் மீண்டும் வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அங்குச் சிறப்புத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த வர்த்தகம் வரும் நவம்பர் மாதம் வரை திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் என்று சிக்கிம் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் ‌ஷெரிங் டி பூட்டியா தெரிவித்தார்.

“இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்,” என்று குறிப்பிட்ட பூட்டியா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆகியோரின் முயற்சிகளாலேயே சீனாவுடனான எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முடிந்தது என்று கூறினார்.

வர்த்தகப் பாதையின் மறுதிறப்பு உள்ளூர் பொருளியலுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​ இந்தியா-சீனா இடையே வர்த்தகம் செய்யக்கூடிய 35 வகையான பொருள்கள் உள்ளன.

வர்த்தகம் செய்யக்கூடிய பொருள்களின் பட்டியலை விரிவுபடுத்துமாறு கோரி, சிக்கிம் அரசு ஏற்கனவே வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநருக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதாகத் திரு பூட்டியா தெரிவித்தார்.

நாது லா கணவாய் வர்த்தக ஏற்பாட்டின்கீழ், கைவினைப் பொருள்கள், கைத்தறி தயாரிப்புகள், ஆடைகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பொருள்களை இப்போது இறக்குமதி, ஏற்றுமதி செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்
சீனாஎல்லைவர்த்தகம்