கோல்கத்தா: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடையும் நிலையில், இந்தியாவை பொம்மைகளுக்கான ஏற்றுமதி நடுவமாக நிலைநாட்ட இந்தச் சூழல் பொன்னான வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியாவின் பொம்மை உற்பத்தித் துறைத் தலைவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அமெரிக்கா அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொம்மைகளுக்கு 145 விழுக்காட்டு வரி விதித்தது.
இதனால், அமெரிக்காவுக்கான சீனாவின் பொம்மை ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொம்மைகளில் 77 விழுக்காடு சீனப் பொம்மைகள்.
சீன ஏற்றுமதி குறைவதால் மற்ற விநியோகிப்பாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
அமெரிக்காவுக்கான பொம்மை ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை நிரப்ப இந்தியாவால் முடியும் என்று இந்திய பொம்மை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அக்ஷய் பிஞ்ச்ரஜ்கா கூறினார்.
சீன பொம்மைகளுடன் ஒப்பிடுகையில் தரம், விலை என இரண்டிலும் போட்டித்தன்மை மிக்கவையாய் இந்தியத் தயாரிப்புகள் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பொம்மைச் சந்தையின் மதிப்பு 41.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கு மேற்கு வங்க மாநிலம் பேரளவில் உதவக்கூடும் என்று கூறிய திரு பிஞ்ச்ரஜ்கா, இதற்கான ஏற்பாடுகளில் உதவும்படி அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, அமெரிக்க - சீன வர்த்தகப் போரால் இந்தியா நீண்டகால அடிப்படையில் பயனடையக்கூடும் என்று ‘மெர்சிடிஸ் - பென்ஸ்’ இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
மேம்பட்ட வர்த்தக வாய்ப்புகள், தடையற்ற வர்த்தகம் போன்ற அம்சங்களை அந்நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்தோஷ் ஐயர் சுட்டினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அண்மைய வரிகளால் இந்திய வாகன உற்பத்தித் துறை நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்று கூறிய அவர், சொகுசு வாகனப் பிரிவில் பயனாளர் மனப்போக்கு தொடர்ந்து ஆக்ககரமாகவே இருப்பதாகச் சொன்னார்.
இருப்பினும், வரி விதிப்புப் போரால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் வாகன உற்பத்தியாளர்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதனால் அவர்கள் வாகனங்களின், குறிப்பாக சொகுசு கார்களின், விலையை அதிகரிப்பதாகவும் திரு சந்தோஷ் குறிப்பிட்டார்.