விஜயவாடா: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சோகச் சம்பவம் ஆந்திராவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.
அங்குள்ள அனக்காப்பள்ளி மாவட்டத்தின் கைலாசப்பட்டினம் பகுதியில், பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த கிடங்கு போன்ற அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழப்பட்டது. பட்டாசு சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பதற்றத்துடன் ஆலையை நோக்கி ஓடிவந்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
அக்குறிப்பிட்ட பட்டாசு ஆலை, உரிய அனுமதியின்றிச் செயல்பட்டு வந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.