மும்பை: ரயில் பயணப் பெட்டியில் தேனிலவு அலங்காரம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தென் மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
மராட்டிய மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 6ஆம் தேதி புறப்பட்ட விரைவு ரயில் ஒன்றின் முதல் வகுப்பு ஏ.சி. தனியறை பெட்டி ஒன்று சொகுசு ஓட்டலின் ‘ஹனிமூன் சூட்’போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதனைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.
ரயில் பெட்டியின் கூரையில் சிவப்பு, வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும் அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள் மற்றும் மலர்களாலும் ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
பயணப் பெட்டியின் படுக்கையில் ‘ஐ லவ் யூ”என்ற எழுத்துகளும் இருந்தன.
அந்தப் பெட்டியே மணமக்களின் தேனிலவு அறைபோல் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தது. யாரோ ஒரு புதுமணத் தம்பதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த அந்தப் பெட்டியை, தனியார் நிறுவனம் ஒன்று இவ்வாறு மாற்றி இருந்தது.
அந்த நிறுவனம்தான் தங்களின் அலங்காரத் திறமையைக் காட்டுவதற்காக அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகக் கூறப்பட்டது.
ஆனால், எந்தப் பயணிகளுக்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
அந்தக் காணொளி ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றது.
ரயில் பெட்டிக்குள் அலங்கரிப்பாளர் நுழைந்தது அனுமதியற்ற செயல் என்றும் விதிமீறல் என்றும் கூறிய ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட பயணச் சீட்டுப் பரிசோதகரைப் பணி இடைநீக்கம் செய்தது.
மேலும், “இது குறித்து துறைரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

