தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்த காரால் ரயில் சேவை பாதிப்பு

1 mins read
15397608-6c11-458b-8979-00ab3eb8a525
பாரந்தூக்கியின் துணையுடன் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்ட கார். - படம்: ஏஎன்ஐ
multi-img1 of 3

புதுடெல்லி: மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் கீழிருந்த தண்டவாளத்தில் விழுந்ததால் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ரயில் சேவை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

ஹைதர்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இவ்விபத்து நேர்ந்தது.

சுற்றுச்சாலைக்கு அடியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் அந்தக் கார் தலைக்குப்புறக் கவிழ்ந்து கிடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சச்சின் சௌதரி, 35, என்ற அக்காரின் ஓட்டுநருக்கு முகத்திலும் தோளிலும் லேசான சிராய்ப்புகள் ஏற்பட்டன.

இதனையடுத்து, தண்டவாளத்திலிருந்து காரை அப்புறப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனால், அவ்வழியே குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ரயில் சேவை தடைபட்டது.

தண்டவாளத்திற்கு மேலிருந்த மேம்பாலப் பகுதியில் வந்தபோது தன்னால் காரைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று சச்சின் சொன்னதாகக் காவல்துறை தெரிவித்தது.

இவ்விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை.

“விபத்து நேர்ந்த இடத்திற்குச் சென்றபோது அங்கு நீலநிற மோட்டார்சைக்கிள் ஒன்றும் கேட்பாரன்றிக் கிடந்ததைக் காவல்துறை அதிகாரிகள் கண்டனர்.

ஆயினும், சனிக்கிழமையிலிருந்தே அந்த மோட்டார்சைக்கிள் கிடக்கிறது என்றும் அதற்கும் கார் விபத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்