பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள லக்குன்டி கிராமத்தில் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன.
கதக் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்தக் கிராமத்தின் வீரபத்திரேசுவரர் கோவிலுக்கு அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது புதையல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, பள்ளம் தோண்டச் சொன்ன கங்கவ்வா பசவராஜ் என்ற பெண்ணிடம் கொடுக்கப்பட்ட செம்பு பாத்திரத்தில் 475 கிராம் தங்க நகைகள் இருந்தன.
இதையடுத்து, அக்கிராமம் முழுவதும் புதையல் குறித்த தகவல் வேகமாகப் பரவியது. தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) கர்நாடக மாநில சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை, லக்குன்டி பாரம்பரிய மேம்பாட்டு ஆணையம் அகழ்வாராய்ச்சிக்கான பணிகளை ஏற்பாடுகள் செய்துள்ளன.
முதல் நாளன்று 48 பேர் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் ஓரடி ஆழத்துக்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் புதையல், நகைகள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்குன்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் கீழும் ஏராளமான தங்க நகைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர கிராமம் முழுவதும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசு ஆலோசித்து வருவதாகவும் கர்நாடக மாநில அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.

