புதுப்பொலிவு பெறவுள்ள திருச்சி மலைக்கோட்டைத் தெப்பக்குளம்

புதுப்பொலிவு பெறவுள்ள திருச்சி மலைக்கோட்டைத் தெப்பக்குளம்

2 mins read
a07d8803-b13b-4719-878c-52c8e277cfc7
மலைக்கோட்டையில் உள்ள தெப்பக்குளத்தை மேம்படுத்த இரண்டிலிருந்து மூன்று கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. - படம்: தி இந்து

திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டைக் கோயிலின் தெப்பக்குளத்தில் மிகப் பெரிய மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவிருக்கின்றன.

நில ஆக்கிரமிப்பு, சாலை நெரிசல் குறித்துத் தொடர்ச்சியாக எழுந்துள்ள புகார்களை அடுத்து 5.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தத் தெப்பக்குளம் சீரமைக்கப்படவிருக்கிறது.

1949ஆம் ஆண்டு, 99 ஆண்டுகாலக் குத்தகைக்குத் தாயுமானவர் சுவாமி ஆலயத்துக்குச் சொந்தமான அந்தத் தெப்பக்குளம், மேம்பாட்டுப் பணிகளுக்காகத் திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரபரப்பான நகரப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பல கடைகள் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் இடையூறாய் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

நடைபாதைகளைக் கடைகள் அடைத்துக்கொண்டதால் மக்கள் சாலைகளில் நடக்க நேர்ந்தது. இந்நிலையில், சீரமைப்புப் பணிகளுக்காகக் கடைகள் அனைத்தும் வேறோர் இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பது நிம்மதியளிப்பதாகப் பொதுமக்கள் பலர் கருதுகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுப்படி, மலைக்கோட்டை-தெப்பக்குள வட்டாரம், கடைகள் அற்ற வட்டாரம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்தது. அதையடுத்து அந்த வட்டாரத்திலிருந்த கடைகள் அனைத்தும் மற்றோர் இடத்துக்கு மாற்றப்பட்டன.

இதற்கிடையே, தெப்பக்குளத்தின் சீரமைப்புக்குத் தனியார் துணிமணிக் கடைகள் உள்ளிட்ட வணிகங்களிடமிருந்து நிதி திரட்டப்படுவதாக திருச்சி மேயர் ம அன்பழகன் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட அறிக்கையின்போது கூறினார்.

தெப்பக்குளத்தின் சீரமைப்புப் பணிக்கு எப்படியும் 2 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தெப்பக்குளத்தைப் பழுதுபார்ப்பது, அலங்கார வளைவுகளுடன் மரபுடைமை விளக்குகளைப் பொருத்துவது, பொழுதுபோக்குப் பூங்கா அமைத்தல், நடைபாதையைச் சீரமைத்தல், படகுச் சவாரிக்கான வசதிகளை உருவாக்குதல் ஆகியவை சீரமைப்புப் பணிகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்