திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

கோப்புப் படம்: ஃப்ரீ பிரஸ் ஜர்னல்

18 Sep 2026 - 12:52 pm

1 mins read

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் அதன் அதிகாரபூர்வ ‘இரட்டை மலர்’ சின்னத்தையும் இடைக்கால நடவடிக்கையாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இதனால், மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரேஜினகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் திரிணாமுல் காங்கிரஸ் பெயரையோ, அதன் சின்னத்தையோ பயன்படுத்த முடியாது.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான சிறுபான்மை அணியினரும், எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தரப்பே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

இரு அணிகளிடமும் வியாழக்கிழமை (செம்டம்பர் 17) ஆணையம் விசாரணை நடத்திய பின்னர், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் பிரிவு 15-ன் கீழ் விரிவான விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்காலிக நடவடிக்கையாக பெயர், சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அக்டோபர் 6 இடைத்தேர்தலுக்காக இரு அணிகளும் புதிய பெயர்களையும், தேர்தல் ஆணையத்தின் சுயேச்சை சின்னங்கள் பட்டியலிலிருந்து தலா மூன்று சின்னங்களையும் தேர்வு செய்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்கால உத்தரவு நடப்பில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதிரிணாமூல் காங்கிரஸ்மம்தாதேர்தல்இடைத்தேர்தல்சின்னம்கட்சிதேர்தல் ஆணையம்