தேர்தலைப் பாராட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்

தேர்தலைப் பாராட்டும் அனைத்துலகப் பிரதிநிதிகள்

2 mins read
250e1115-eb6f-4b90-b153-f89c9f197d40
 இந்தியத் தேர்தல் செயல்பாடுகளின் துல்லியம், வேகம் ஆகியவை தங்களை வியக்க வைத்ததாக அனைத்துலகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள்தான் உலகுக்கே உண்மையான ஜனநாயகத் திருவிழா என அனைத்துலகப் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது அசாம், கேரளா, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், மூன்று சட்டமன்றத் தேர்தல்களைப் பார்வையிட 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியா வந்திருந்தனர்.

தேர்தல் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பிரதிநிதிகள், இந்தியத் தேர்தல் செயல்பாடுகளின் துல்லியம், வேகம் ஆகியவை தங்களை வியக்க வைத்ததாகத் தெரிவித்தனர்.

இந்தியத் தேர்தல் முறை உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான திருவிழா என்றும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

அசாம், கேரள, புதுவை மாநிலங்களில் நடைபெற்ற அண்மையத் தேர்தல்களில் சாதனை அளவிலான வாக்காளர்கள் பங்கேற்றதும் நுணுக்கமான திட்டமிடல், தடையற்ற தேர்தல் செயலாக்கம் ஆகியவையும் பாராட்டுக்குரியவை என்று அனைத்துலகப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்க இந்திய மக்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தம்மை நெகிழ வைப்பதாக குரோஷியா நாட்டைச் சேர்ந்த பிரானிமிர் ஃபர்காஸ் என்ற பார்வையாளர் தெரிவித்தார்.

“இந்தியாவில் தேர்தல் செயல்முறை என்பது, நிச்சயமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு களம்,” என மெக்சிகோ பிரதிநிதி ஊக் கிப் எஸ்படாஸ் கூறியுள்ளார்.

அனைத்துலகப் பிரதிநிதிகளுக்குப் புதுவையில் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவை காணும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், அசாம் மாநில கிராமப்புறப் பகுதிகளிலும் கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரம் பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவை பல்வேறு நாடுகள் பின்பற்ற வேண்டியவை என்று கென்யா நாட்டுப் பிரதிநிதி ஃபஹிமா அரபத் அப்தல்லா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்