புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் இவ்வாண்டு (2025) ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை எந்தத் தொலைபேசி உரையாடலும் இடம்பெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூண்ட போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குப் பங்கில்லை என்று அவர் கூறியுள்ளார். போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாகத் திரு ஜெய்சங்கர் சொன்னார். இருப்பினும், அத்தகைய வேண்டுகோள் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை இயக்குநரிடமிருந்து அதிகாரபூர்வமாக வரவேண்டும் என்பதை இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது என்றார் அவர். ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது திரு ஜெய்சங்கர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதற்கு முன்னர் திரு டிரம்ப், தாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த இணங்கின என்று கூறியிருந்தார்.