புதுடெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான, விரிவான, உலகளாவிய, உத்திபூர்வ பங்காளித்துவத்தை வளர்த்தெடுக்க உறுதிபூண்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இத்தகவலை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது அருமை நண்பரான அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா-அமெரிக்கா விரிவான, உலகளாவிய பங்காளித்துவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நானும் உங்களைப் போல உறுதியாக உள்ளேன். உக்ரேன் மோதலுக்கு உறுதியான தீர்வு காணும் உங்கள் முயற்சிக்கு ஆதரவுகள்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது சமூக ஊடகப்பதிவில், பிரதமர் மோடியுடனான அருமையான தொலைபேசி உரையாடலின்போது, அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோடி மகத்தான பணியைச் செய்வதாகவும் ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திரு டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுடனான, வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கப் பேராளர் பிராண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தியா சென்றடைந்தனர். இதையடுத்து இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சக மட்டத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏறத்தாழ 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் விரைந்து தீர்வு காணவும் இருதரப்புக்கும் சேதாரம் இல்லாமல் சுமுகமாக ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாக இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத் தீர்வு காண இருதரப்பும் முன்வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, அடுத்தடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்புக்கும் இடையே சுமுகத் தீர்வு காண இயலும் என நம்புவதாக இந்திய அரசு மேலும் குறிப்பிட்டது.

