டிரம்ப்பின் வரிப் போரும் சிக்கித் தவிக்கும் திருப்பூரும்

3 mins read
9b321757-b6e8-4e2a-8bbb-d7f14b63b61f
தமது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்குமுன் அவற்றின் தரத்தைப் பரிசோதிக்கும் செந்தில் குமார். - படம்: செந்தில் குமார்
multi-img1 of 2

கி.விஜயலட்சுமி

அமெரிக்காவின் 47வது அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து அனைத்து உலகத் தலைவர்களின் கண்களும் வெள்ளை மாளிகை பக்கம் திரும்பின. எத்திசையிலிருந்து எந்த நாட்டின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் எனத் தெரியாமல் அனைவரும் குழம்பினர்.

அவர்கள் நினைத்தது போலவே குடியேறிகளை நாடு கடத்துவது, உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை ரத்து, எச்1பி விசா கட்டணம் உயர்வு போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் அண்டை நாடுகள், பங்காளிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவைக் கொண்ட நாடுகள் என்றுகூட பார்க்காமல் அனைத்து நாடுகளின்மீதும் வரிப் போர் நடத்தி வருகிறார் டிரம்ப்.

இந்தியாமீது 50% கூடுதல் வரி

குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காடு அடிப்படை வரியை டிரம்ப் உயர்த்தினார். அதற்கு அவர் பல காரணங்களைக் கூறினாலும், அவரின் இந்த நடவடிக்கையால் இந்தியாவிலிருந்து ஆடைகள், இறால், வைர நகைகள் ஆகியவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

இந்தியாவின் முதன்மையான ஆடைகள் ஏற்றுமதி நடுவங்களில் ஒன்று திருப்பூர். அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளில் 60 விழுக்காடு திருப்பூரிலிருந்து வருகின்றன.

வ்வட்டாரத்தில் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் திரு செந்தில் குமாரிடம் டிரம்ப்பின் கூடுதல் வரி உயர்வால் அவர் சந்தித்த பாதிப்புகள் குறித்தும் அங்கு செயல்படும் மற்ற நிறுவனங்களின் நிலை குறித்தும் அறிந்துவந்தது தமிழ் முரசு.

அமலுக்கு வரும் முன்பே பாதிப்பு

ஆடைகள் ஏற்றுமதியில் 30 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த அவர், “அமெரிக்க அதிபரின் வரி உயர்வு குறித்த தகவல் வெளியானதும் அதனுடைய பாதிப்புகளை அந்நாட்டுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உணரத் தொடங்கின.

“குறிப்பாக, எங்களிடமிருந்து ஆடைகள் வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள் 25 விழுக்காட்டுத் தள்ளுபடியுடன் பொருள்களை வழங்கும்படி எங்களுக்கு நெருக்குதல் அளித்தன. அதுபோல் ழங்கத் தவறும் நிறுவனங்களுடன் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையும் முறித்துகொள்ள அவை தயாராக இருந்த.

“அதற்கு அந்நிறுவனங்கள் கூறும் காரணம் யாதெனில், பொருள்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்குமுன் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்துவிடும். அவை அமெரிக்காவை அடைந்துவிட்டால் தீர்வையை அமெரிக்க நிறுவனம் செலுத்த வேண்டும். அதனால், தள்ளுபடி விலைக்குப் பொருள்களைக் கேட்பதாக அவை கூறின. அமெரிக்க நிறுவனங்கள் கேட்ட விலைக்கே பொருள்களைத் தர பல நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

“அதனால் ஏற்படும் இழப்பைச் சமாளிக்க ஆட்குறைப்பு, ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளைத் திருப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கையாண்டன,” எனக் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் பக்கம் சாய்ந்த ஏற்றுமதியாளர்கள்

அமெரிக்க ஏற்றுமதியில் ஈடுபடும் பெரும்பாலான நிறுவனங்கள் நூற்பாலையிலிருந்து ஆடைகளுக்குச் சாயமிடுவது வரை அனைத்துக் கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய பெருநிறுவனங்கள் என்றும் கிட்டத்தட்ட 1,500 ஊழியர்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரிவர் என்றும் திரு செந்தில் தெரிவித்தார்.

“அத்தகை அமைப்பைக் கொண்ட அந்நிறுவனங்கள் அமெரிக்காவுடன் இருக்கும் பூசல்கள் சற்று தணியும்வரை ஐரோப்பிய நாடுகள், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தைச் சற்றுத் திருப்பலாம் என முடிவுசெய்தன. இதனால், அந்நாடுகளுடன் மட்டும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்த மற்ற நிறுவனங்கள் பாதிப்பைச் சந்தித்தன,” என்றார் அவர்.

நெருக்கும் வங்கிகள்

“இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அமெரிக்காவுடன் ஏற்றுமதியில் ஈடுபடும் பின்னலாடை நிறுவனங்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் யோசிக்கின்றன. கடன் பெற்ற சில நிறுவனங்களையும் கடனை உடனடியாகத் திருப்பிச்செலுத்தும்படி நெருக்குதலும் சில வங்கிகள் அளிக்கின்றன.

“இவற்றையெல்லாம் சமாளிக்க முடியாத சில நிறுவனங்கள் சரக்குகளை வேறு நாட்டிற்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பும் முடிவை எடுத்தன,” என்றார் திரு செந்தில்.

மோசடிக்காரர்களின் வலையில் சிக்கிய சில நிறுவனங்கள்

உதாரணமாக, பங்ளாதேஷ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குப் பொருள்களை அனுப்பி அங்கிருக்கும் வர்த்தகர் உதவியோடு பொருள்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதே அவற்றின் திட்டம். அதிலும், சில நிறுவனங்கள் ஏமாற்றம் கண்டன.

“பொருள்கள் வந்துசேர்ந்ததும் அங்கிருக்கும் வர்த்தகர்கள் திருப்பூர் நிறுவனங்கள் உடனான இணைப்பைத் துண்டித்துவிடுகின்றனர். தாங்கள் மோசடிக்குள்ளானதை அறிந்ததும் பொருள்களை எவ்வாறு திரும்பப்பெறுவது எனத் தெரியாமல் சிலர் இன்னலுக்கு ஆளாகினர். பொருள்களை உள்ளூர் சந்தையில் விற்க முடியாமலும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமலும் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் தவிக்கின்றன,” எனத் திரு செந்தில் குமார் வேதனையுடன் பகிர்ந்தார்.

“எங்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் தகவல் என்னவென்றால், நூல்களுக்கான பொருள் சேவை வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக இந்திய அரசு குறைத்ததுதான்,” என்றார் அவர்.

அமெரிக்காவுடன் இந்தியா நடத்திவரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டி, அதன்மூலம் கூடுதல் வரி உயர்வில் சற்று தளர்வு கிடைக்காதா என ஏக்கத்துடன் திருப்பூர் நிறுவனங்கள் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்