புதுடெல்லி: இணையத் தொடர்பு இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் திறன்பேசிகளில் நேரலையாக ஒளிபரப்ப இந்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி திட்டமிட்டு வருகிறது.
அதற்கேதுவாக, ‘டைரக்ட் டு மொபைல்’ (டி2எம்) தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதன் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதற்கான முன்னோடிச் சோதனைகளை டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரசார் பாரதி மேற்கொண்டு வருவதை மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி) கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ‘சாங்க்யா லேப்ஸ்’ நிறுவனமும் அம்முன்னோடிச் சோதனைகளில் கைகோத்துள்ளன.
கான்பூர் ஐஐடியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘டி2எம்’ சோதனைகள் வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தொலைக்காட்சி போன்று, ஒளிபரப்புச் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, திறன்பேசிகளுக்கான நேரலை ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு வழக்கமான கைப்பேசி அல்லது இணையத் தரவுக் கட்டமைப்புகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, ஒளிபரப்புச் சமிக்ஞைகளைப் பெற்று, மாற்றுவதற்குக் குறிப்பிட்ட வன்பொருளைத் திறன்பேசிகளில் பொருத்தவேண்டும்,” என்று அதிகாரி ஒருவர் விளக்கினார்.
இணையத் தொடர்பு வேகத்தையும் அதன் நிலைத்தன்மையையும் சார்ந்திராததால் உயர்ந்த தரமுடைய ஒளிபரப்பும் ஒலிபரப்பும் சாத்தியம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.