தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவெக மாநாடு; சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியே வரும் என விஜய் கர்ஜனை

3 mins read
738f710d-719b-4f36-b647-a1695ba6b21c
மாநாட்டுக்கு வந்த தவெக தலைவர் விஜய். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: மதுரையே அதிரும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும் என்று கர்ஜித்தார்.

“வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும்.

“மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்குப் பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.

“யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்தக் கூட்டம் வாக்காக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா, என்று விஜய் முழங்கினார்.

மேலும் பேசிய அவர்,  தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.

தவெக மாநாட்டுக்காக சுமார் 2 லட்சம் பேர் குவிந்திருப்பதாகக் கூறப்பட்டது.

முன்னதாக மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.

தவெக 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு சிறப்பு மாநாட்டு பாடல் வெளியிடப்பட்டது. ‘பெரியாரின் பேரன்’ என்ற பின்னணி வரிகள் முழங்க பெரும் ஆரவாரத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப் வாக்’ நடைமேடையில் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது தொண்டர்கள் கொடுத்த கட்சித் துண்டுகளை பெற்று தோளில் அணிந்து கொண்டார்.

இதற்கிடையே, மதுரை தவெக மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாகவும் தென் தமிழ்நாட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி உள்ளோம், தமிழ்நாடே அதிர்ந்துவிட்டது என்று புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு தவெகவின் வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொண்டர்கள் அமர பச்சைக் கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் நாற்காலிகளும் முக்கிய பிரமுகர்கள் அமர சிவப்புக் கம்பளம் விரித்து அதில் 300 நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.

இதற்கிடையே மதுரை தவெக மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தமிழக ஊடகமான தினமணி தகவல் தெரிவித்தது.

கடும் வெயில் காரணமாக அவர்கள் மயக்கமடைந்தனர். ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும் ஒன்பது பேர் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் காலையிலேயே மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் இருந்ததைக் காண முடிந்தது. குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் அழுதுகொண்டே இருந்தன. காலையிலிருந்து வெயிலில் வெகுநேரம் காத்திருந்தவர்கள் விஜய்யை பார்த்ததும் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.

குறிப்புச் சொற்கள்