சென்னை: தமிழக மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தவெக அரசாங்கத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் முதல்வாரத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தத் தகவலைத் தமிழக நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் மரிய வில்சன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அதற்காக ஒவ்வொரு துறை வாரியாக முதலமைச்சர் விஜய் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“முதலமைச்சர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதலின்படி, துறை வாரியான பட்ஜெட் ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. முறைப்படி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்,” என்று மரிய வில்சன் உறுதியளித்தார்.
இந்த பட்ஜெட் முந்தைய ஆட்சிகளைப் போல் இல்லாமல், கடனில் தத்தளிக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் ஒரு மிகச்சிறந்த பொருளியல் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“விஜய் முதல்வராகப் பதவியேற்றது முதல் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
“ஊழலுக்கு எதிரான தூய்மையான நிர்வாக நடவடிக்கைக்குத் தமிழக மக்கள் 100 விழுக்காடு ஆதரவை வழங்கி வருகிறார்கள்,” என்றார் மரிய வில்சன்.

