சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர உல்லாசத்தலம் ஒன்றில் பிப்ரவரி 26ஆம் தேதி (புதன்கிழமை) நடந்தது.
இவ்விழாவில், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து 2,500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக பாடகி மாரியம்மாள் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது.
விழா மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கை, மாநில, மத்திய அரசு ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, ‘கெட் அவுட்’ கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அதில் கையெழுத்திட்டனர். பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், கட்சி நிர்வாகிகள் மேடையில் உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து விஜய் பேசினார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச்சை தொடங்கிய விஜய், “மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சியை பற்றியோ கவலை இல்லாமல், பணம் பணம் என்று திரியும் பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதே நமது வேலை. தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்தது இல்லை. 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும். 1967, 1977 போன்று 2026ஆம் ஆண்டில் மாற்றம் வரும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழகத்தில் தற்போது புதிதாக மும்மொழிக் கொள்கை குறித்து பிரச்சினை கிளம்பியுள்ளது. மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்காது. நிதியை கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை.
“மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் தவறு. அதனால், பொய் பிரச்சாரங்களைப் புறந்தள்ளிவிட்டு உறுதியாக இதை தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கிறது,” எனத் தவெக தலைவர் விஜய் பேசினார்.
செய்தியாளர்மீது தாக்குதல்
இதற்கிடையே, இவ்விழாவிற்கு வந்த செய்தியாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆண்டு விழா அரங்கில் அவர்கள் காட்சிகளைப் படமெடுத்தபோது அங்கிருந்த மெய்காப்பாளர்கள் (Bouncers) தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் மற்ற செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் வீட்டிற்குள் காலணி வீச்சு
தவெக ஆண்டு விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்குமுன்பு நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டின் மீது காலணி வீசப்பட்டது. காலணி வீசிய மர்ம நபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.மர்ம நபரின் இந்தக் காலணி வீச்சு சம்பவம் பற்றிய காணொளி இணையத்தில் பரவலானது.

