ராஞ்சி: ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர்; 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயில் சக்ரதர்பூர் அருகே தடம் புரண்டதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் புரட்டிப் போடப்பட்டன.
“சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுவர்களுக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்,” என்று தென்கிழக்கு ரயில்வே ரயில்வே அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் கூறினார்.
“சரக்கு ரயிலும் அருகிலேயே தடம் புரண்டுள்ளது. இரண்டு விபத்துகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை,” என்று அவர் சொன்னார்.
நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஹவுரா - மும்பை விரைவு ரயில் மோதியதாகவும், தடம் புரண்ட 18 பெட்டிகளில் 16 பெட்டிகள் பயணிகள் பெட்டிகள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
“மீட்பு, நிவாரணப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. 80 விழுக்காட்டுப் பயணிகள் சக்ரதர்பூர் ரயில் நிலையத்துக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனர். 20 விழுக்காட்டுப் பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்படுவார்கள்,” என்று ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
விபத்தின் காரணமாக சில பயணிகள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

