திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் சுரங்கப் பாதை கட்டுமானப் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துவிட்டனர்.
காயங்களுடன் எழுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வயநாடு கள்ளாடிப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் ஏழு ஊழியர்கள் காணாமல் போயுள்ளனர்.
மலப்புரம், வயநாடு மாவட்டங்களை இணைக்கும் ‘அனக்கம்பொயில்-கல்லாடி-மேப்பாடி’ இரட்டைச் சுரங்கப் பாதை திட்டப்பணி நடைபெறும் மீனாட்சிப் பாலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
திட்டப்பணியின் பொறியாளர்களும் பாதுகாப்புப் பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வயநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக 265 மி.மீ. பருவமழை பதிவாகியுள்ளது.
எனினும், இது இயற்கையான நிலச்சரிவு அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கேரள வேளாண்துறை அமைச்சர் டி. சித்திக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்டுமானத்திற்காக அங்கு மண்ணைக் குவித்து வைத்ததே விபத்துக்குக் காரணம் என்று அவர் கூறினார்.
இடிபாடுகளை அகற்றுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடிய அமைச்சர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முண்டக்கையில் 298 பேர் உயிரிழந்த நிலையில், இத்தகைய அலட்சியத்தை சகித்துக்கொள்ள முடியாது என்றார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், மலையிலிருந்து மரங்களை வேரோடு பிடுங்கிக்கொண்டு தடிமனான சேறு பாய்ந்து வருவது தெரிகிறது.
அப்பகுதியில் சில வீடுகளும் தங்கும் விடுதிகளும் இருப்பதால், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உள்ளூர் மக்கள் முதற்கட்ட மீட்புப் பணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் வி.டி.சதீசன் இதுகுறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் வயநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நில அதிர்வு மண்டலம் 3ன் கீழ் வரும் வயநாடு, கேரளாவிலேயே நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாகத் திகழ்கிறது.
1984, 1992, 2007 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு பல உயிர்களைப் பலிவாங்கிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

