அலுவலகத்தில் குளிரூட்டி வெடித்து ஊழியர் இருவர் உயிரிழப்பு

1 mins read
d2f1fca7-4278-4498-b0ca-bcc27a9f2d8b
குளிரூட்டி வெடித்த வேகத்தில் அலுவலகத்தின் சன்னலும் உடைந்து, கீழே விழுந்ததாகக் கூறப்பட்டது. - மாதிரிப்படம்: ஊடகம்

ராய்ப்பூர்: அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென குளிரூட்டி ஒன்று வெடித்துச் சிதறியதில் 48 வயது ஆடவர் ஒருவரூம் 26 வயதுப் பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) நேர்ந்த இவ்விபத்தில் மேலும் இருவர் காயமுற்றனர்.

குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் உள்ள அக்கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் மாலை நேரத்தில் இவ்விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள ‘ஆட்டோமேஷன் ஆர்ட் ஆஃபிஸ்’ என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

குளிரூட்டி வெடித்த வேகத்தில் அந்த அலுவலகத்தின் சன்னலும் உடைந்து, கீழே விழுந்தது.

வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதும் அருகிலிருந்த அலுவலகத்தில் வேலைசெய்தோர் வெளியே வந்து பார்த்தனர். உடனடியாக, அவ்விபத்து குறித்து அவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினருடனும் அவசர மருத்துவ வாகனத்துடனும் அங்கு விரைந்து சென்ற காவல்துறை, மீட்புப் பணிகளில் இறங்கியது.

அப்பணியிடத்தைப் புகை சூழ்ந்திருந்ததாகவும் அந்தப் பெண்ணும் ஆடவரும் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

அந்த அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்