பெங்களூர்: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள கான்ராட் ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் இரு வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 30ஆம் தேதி மாலையில் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்திற்கு அவர்கள் நீந்தச் சென்றபோது அத்துயரம் நடந்தது.
உயிரிழந்தவர்கள் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனி, ஸ்லோவாக்கியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் லுஃப்தான்சா விமான நிறுவன ஊழியரான 57 வயது அலெக்சாண்டர் மேக்சிமிலியன் தைஸ். மற்றொருவர் ஐபிஎம் தொழில்நுட்ப நிறுவனத்தின் திட்ட மேலாளரான 45 வயது ஜூராஜ் ஹோர்வத் ஆவார்.
அவர்களைக் காப்பாற்ற முயன்ற 41 வயது அமெரிக்கரான மேத்யூ டெசாண்டிஸ், நீச்சல் குளப் பராமரிப்பாளர் ராகுல் திவாரி ஆகிய இருவரும் காயமுற்றனர்.
அவர்கள் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.
ஹில்டன் குழுமத்தின்கீழ் அந்த சொகுசு ஹோட்டல் செயல்படுகிறது. ஓர் அறைக்கு ஒரு நாளுக்கான வாடகை குறைந்தது ரூ. 25,000 வசூலிக்கும் அந்த ஹோட்டலின் பாதுகாப்பு அலட்சியம் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபற்றி ஹோட்டல் நிர்வாகம் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
