டெல்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து இருவர் பலி; இரு பொறியாளர்கள் இடைநீக்கம்

டெல்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து இருவர் பலி; இரு பொறியாளர்கள் இடைநீக்கம்

1 of 2
படம்: தி இண்டியன் எக்ஸ்பிரஸ்
படம்: தி நியூஸ்21

05 Nov 2026 - 7:04 pm

2 mins read

புதுடெல்லி: பழைய டெல்லியின் சாவ்ரி பஜார் அருகே கட்டுமானப் பணியில் இருந்த மூன்று மாடிக் கட்டடம் ஒன்று புதன்கிழமை (நவம்பர் 4) திடீரென இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். நால்வர் படுகாயமடைந்தனர். பணியில் கடுமையான கவனக்குறைவு இருந்ததாகக் கூறி இரு மாநகராட்சிப் பொறியாளர்களை டெல்லி மாநகராட்சி உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

சாவ்ரி பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில், கிட்டத்தட்ட 50 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தில் அக்கட்டடம் கட்டப்பட்டு வந்தது.

புதன்கிழமை காலை 9.50 மணியளவில் கூரையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த தாங்கு பலகைகளை ஊழியர்கள் அகற்றியபோது கட்டடம் உள்வாங்கித் தரைமட்டமானது. அப்போது அங்கு கிட்டத்தட்ட 15 ஊழியர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, உள்ளூர்வாசிகள் நான்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து இருவரின் சடலங்களை மீட்டனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

கட்டடம் இடிந்து விழுந்தபோது அங்கு கிட்டத்தட்ட 15 கட்டுமான ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஏழு பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் காயமின்றித் தப்பினர்.
கட்டடம் இடிந்து விழுந்தபோது அங்கு கிட்டத்தட்ட 15 கட்டுமான ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஏழு பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் காயமின்றித் தப்பினர். - படம்: மராத்தி நியூஸ்

சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு எந்தவித கட்டட வரைபட அனுமதியும் பெறப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. தரமற்ற கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும், கட்டடத்தின் தூண்கள் பாரத்தைத் தாங்க முடியாமல் போனதும் விபத்திற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

இதையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ், பழைய டெல்லி மண்டல உதவிப் பொறியாளர் முகமது நயீம், இளநிலைப் பொறியாளர் அமன் தலால் ஆகிய இருவரை டெல்லி மாநகராட்சி ஆணையர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்