கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஓர் எருமை மாட்டின் உரிமையாளர் யார் என்பதில் எழுந்த சிக்கலை, காவல்துறையினர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அறிவியல்பூர்வமாகத் தீர்த்து வைத்துள்ளனர்.
நாராயண் விஹார் பகுதியைச் சேர்ந்த ராம் லால் என்பவர், ஒரு மாதத்திற்கு முன்பு தனது எருமை மாடும் கன்றுக்குட்டியும் காணாமல் போனதாகப் புகார் அளித்திருந்தார்.
நீண்ட நாள் தேடுதலுக்குப் பிறகு, இந்திரஜித் கேவத் என்பவரது வீட்டில் தனது மாடுகள் கட்டப்பட்டிருப்பதை அவர் கண்டார். ஆனால், அந்த மாடுகள் தன்னுடையவை என இந்திரஜித்தும் உரிமை கோரினார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், வழக்கு குன்ஹாடி காவல் நிலையத்திற்குச் சென்றது. அங்கு இருவரும் வெவ்வேறு தகவல்களைக் கூறினர்.
தமது எருமைக்கு 4 முதல் 5 வயதுதான் ஆகிறது. இது அண்மையில்தான் கன்று ஈன்றது என்பது ராம் லாலின் வாதம்.
தமது எருமைக்கு 7 வயது ஆகிறது. இதை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டேன் என்பது இந்திரஜித்தின் வாதம்.
மாடு யாரிடம் வளர்கிறது என்பதைவிட, அதன் உண்மையான வயது என்ன என்பதை உறுதி செய்ய காவலர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, எருமை மாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அங்கு மாட்டின் பற்களையும் உடல்நிலையையும் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த எருமைக்கு 4 முதல் 5 வயதுதான் ஆகிறது என அறிக்கை அளித்தனர். இது ராம் லால் சொன்ன தகவலுடன் ஒத்துப்போவதைக் காவலர்கள் உறுதி செய்தனர்.
இறுதியில், உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய இந்திரஜித்திடமிருந்து மாடுகள் மீட்கப்பட்டு, அதன் உண்மையான எஜமானரான ராம் லாலிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏறக்குறைய 90,000 ரூபாய் மதிப்புள்ள இந்த மாட்டுக்காக நடந்த இந்த ‘உரிமைப் போர்’ ஓர் அறிவியல்ரீதியான ஆய்வின் மூலம் சுமுகமாக முடிவுக்கு வந்தது.

