புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் இரு இந்தியக் கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஈரான் போர் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் அந்தப் பகுதியிலேயே முடங்கின.
இந்தச் சிக்கலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், எரிபொருள் விநியோகத்திலும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில், இந்திய அரசு ஈரானுடன் நடத்திய தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதி கிடைத்துள்ளது.
போர்ச் சூழல் தொடங்கியதில் இருந்து இதுவரை 8 எரிபொருள் சரக்குக் கப்பல்கள் இந்த வழியே பயணம் செய்து பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்துள்ளன.
கடந்த 1ஆம் தேதி, ‘ஜக் வசந்த்’ என்ற எல்பிஜி கப்பல் மும்பை துறைமுகம் வந்தடைந்தது.
தற்போது, ‘க்ரீன் ஆஷா’, ‘க்ரீன் சான்வி’ ஆகிய மேலும் இரண்டு இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல்கள் வளைகுடாப் பகுதியைத் தாண்டி இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதை கப்பல் கண்காணிப்புத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதுதவிர, ‘ஜக் விக்ரம்’ என்ற மற்றொரு கப்பல் ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே காத்திருக்கிறது. இதுவும் விரைவில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நகர்வு இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

